Print this page

கேள்வி. குடி அரசு - விளக்கக்குறிப்பு - 20.09.1931 

Rate this item
(0 votes)

மூன்று கன்றுக்குட்டிகள் 

மூன்று பசுவின் கன்றுக்குட்டிகள் ஒன்றாய் ஒரு காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் குடியானவர் வீட்டுக்கன்றுக்குட்டி: 

“நண்பர்களே வீட்டுக்கு போகலாம், பால் கரக்கும் நேரமாய் விட்டதால் நாம் போய் பால் குடிக்கலாம்” என்றது. 

செட்டியார் வீட்டு கன்றுக்குட்டியானது "பால் கரக்கின்ற நேர மானால்தான் என்ன முழுகிப் போய்விட்டது? வயிரார பால் கிடைக்கவா 

போகின்றது?” என்றது. 

மூன்றாவதான அய்யர் வீட்டுக்கன்றுக்குட்டியானது “நீங்கள் என்னமோ பேசிக்கொள்ளுகின்றீர்களே? எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே” என்றது. 

ஒவ்வொன்றும் இந்தப்படி பேசியதின் கருத்து என்ன? 

பதில் 

குடியானவன், கன்றுக்குட்டிக்கு வயிராரப் பால் கொடுப்பது வழக்கம். 

செட்டியார், கன்றை அவிழ்த்து விட்டு முலைக்காம்பில் வாய்வைத்து முட்டி கொஞ்சம் பால் குடித்தவுடனேயே கன்றுக்குட்டியை பிடித்துக்கட்டி விடுவது வழக்கம். 

அய்யரோ, கன்றுக்குட்டியை மாட்டுக்கு எதிரில் காட்டுவதைத்தவிர பக்கத்தில் கட்டி இருக்கக்கூட சம்மதிக்காமல் பால் கரந்து கொள்ளுவார். 

ஆதலால் அவை தன் தன் அனுபவங்களையே பேசின. 

குடி அரசு - விளக்கக்குறிப்பு - 20.09.1931

Read 97 times